Thursday, April 1, 2010

பூப்பெய்திய தோழிகள் .....!!!!







ஏண்டி வெள்ளையம்மா
பெரியமனுசி தான் ஆயுட்டோம்
சந்தோசத்ததான் தொலைச்சிட்டோம்

நாலு வயசு தான் இருக்கும்
நமக்கு
நாலு தெருவ சுத்திவருவோம்
ஆளுக்கு
நானூறு வார்த்த தான் பேசிட்டு வருவோம்
கேள்விகேட்க தான் யாருமில்ல
கேட்டாத்தான்
பதில சொல்ல நமக்கு நேரமில்ல ....
                  ( ஏண்டி வெள்ளையம்மா )
பாண்டிதான் விளையாடுவோம்
பாதியில  ஆத்தா கூப்டரான்னு
ஓடிடுவோம்
பல்லாங்குழி தான் ஆடிடுவோம்
பல்லு போன பெரிசுகிட்ட
பஞ்சாயத்து தான் பண்ணிடுவோம் ......
பாவி மக
ஆத்தகாரி தான்
பஞ்சாரத்த தூக்கிட்டுத்தான் வந்திடுவா
சுள்ளி பொறுக்க தான் அனுப்பிச்சுடுவா
                      ( ஏண்டி வெள்ளையம்மா )
சுள்ளியும் தான் பொறுக்க போயிடுவோம்
கூடவே
சுள்ளான் ரெண்டா கூட்டிட்டு போயிடுவோம்
மாம்பழந்தான் பறிச்சுடுவோம்
அத
மாட்டிக்கமா தான் தின்னுடுவோம் ....
தண்ணி எடுக்கத்தான் சேர்ந்திடுவோம்
தேவை இல்லாதத பேசிடுவோம் ....
முறுக்கு ஒன்னுக்கு தான்
சண்ட போடுவோம்.....
மூஞ்சிய தூக்கிட்டு தான் 
பிரிஞ்சுடுவோம் ..........
                       ( ஏண்டி வெள்ளையம்மா )
பள்ளிகூடத்துக்கு தான் போயிடுவோம்
பக்கி
டீச்சர் அடிக்குரானு  திட்டிடுவோம் ....
டிபன்பாக்ஸ் தான் பகிந்துடுவோம்
பச்ச புள்ளைய போல
தின்னி பண்டராம்னு தன் திட்டிக்குவோம் ....

ஏண்டி வெள்ளையம்மா
பெரியமனுசி தான் ஆயுட்டோம்
சந்தோசத்ததான் தொலைச்சிட்டோம் .....

ஆமடி சோலையம்மா
அம்புட்டும்
நாபகம் தான் இருக்கு
மனசுல
வேற யோசனை ஒன்னு ஓடிக்கிட்டுருக்கு ........

களவாண்டி தின்ன காலந்தான் போச்சு
கடத்தெருவுக்கு போற வழி
தான் மறந்து போச்சு ....

ஏண்டி சோலையம்மா
பெரியமனுசி தான் ஆயுட்டோம்
சந்தோசத்ததான் தொலைச்சிட்டோம் .....

பரிட்சையில தான் பெயிலா போயிட்டோம்
பேபய மவ
மார்க்க கேட்டுதான் அடிச்சாணுவ.....
ஊர விட்டு ஓடலாம்னு பேசுனோம்
பொட்டபுள்ள நாம
பொழப்ப இங்கேயே ஓட்டலாம்னு
ஒட்டிகிட்டோம் ......

ஏண்டி சோலையம்மா
ஞாபகம் தான் இருக்கா ...
இல்ல
வேற யோசன தான் இருக்கா ???
அது இல்லடி
வெள்ளையம்மா
குத்த வச்சு உக்காந்து தான்
உக்காந்தேன்
மாம ஒருத்த வந்துட்டா
ஆத்தாளும் தான்  பேசி முடிச்சுட்டா ...
வர்ற தைல தான்
கல்யாணமும் வச்சுட்டா.....

களவானிபைய
நம்மளத்தான் பிரிச்சுட்டான் ....

ஏண்டி வெள்ளையம்மா
பெரியமனுசி தான் ஆயுட்டோம்
சந்தோசத்ததான் தொலைச்சிட்டோம் .....

இனிமே
உன் கஷ்டம் உன்னோட ....
என் கஷ்டம் என்னோட....

Wednesday, March 31, 2010

கூலியின் வேண்டுதல் .......

ஏனய்யா கடவுளே
கல்லாயி தொலஞ்ச
கண் தொறந்து பாக்கமாட்டிய!!

படச்சது தான் படைச்ச
பாவிய
பணக்கார புள்ளையா
படைச்சிருக்க கூடாதா ?
நாலெழுத்து
படிக்க வச்சிருக்க கூடாதா?
                                      ( ஏனய்யா கடவுளே )
கூலிக்கார அப்பன தான் கொடுத்த
கொஞ்சம்
கூழ் கொடுக்குற தொழில தான்
தெரிஞ்சிருக்க கூடாதா?
நல்ல ஆத்தாள தான் கொடுத்த
ஏனய்யா இன்னும்
நாலஞ்சு வருசம் கூட வச்சிருக்க கூடாதா?
                                    ( ஏனய்யா கடவுளே )
கல்யாணம் தான் பண்ண வச்ச
பொன்  கொடுக்குற
பொஞ்சாதிய கொடுத்திருக்க  கூடாதா?
புள்ள வரம் தான் கொடுத்த
ஏனய்யா
பொட்ட புள்ளைய கொடுத்து தொலைச்ச!!
                                   ( ஏனய்யா கடவுளே )
கொடுத்தது தான் கொடுத்த
கொஞ்சம் படிக்க வச்சு கெடுத்த
கெடுத்தது தான் கெடுத்த
பாவிமக
பாடபடுத்துற பட்டணத்தில படிக்க!!
படிக்க வைக்கத்தான் ஆச
நாரபையன்
எனக்கு ஏதும் கொடுத்து
வைக்கல காச!!
                                     ( ஏனய்யா கடவுளே )
பொட்டையில் ஒண்ண
குத்த வச்சுக்க வச்ச
குடிச கட்ட
மாமன எங்க வச்ச ?
மருமகன் தான்  ஒருத்தன் வந்தான்
மகராசன்
மகளுக்கு வாழ்க்க தந்தான்
                           ( ஏனய்யா கடவுளே )
வரதட்சனையும் கேட்டுவுட்டான்
வாய்தவறி சொல்லிட்டேன்
வழி இல்லன்னு
வந்துட்டா
வாயு வவுரும ..
வாழ்க்கைய சரிகட்ட
வருமானம் இல்ல
வரிஞ்சுகிட்டு உழைக்க
வயசும் இல்ல
                        ( ஏனய்யா கடவுளே )
இன்னொருத்தியும் தான் இருக்கா
அவளும்
குத்த வச்சுக்க காத்திருக்க ..
பொண்டாட்டியும் தான் இருக்கா
பொழப்ப கெடுக்கத்தான் வந்திருக்கா
அத்தகாரியும் தான் வந்து வந்து
அழுதிட்டு தான் போறா
பெரியமனுசி
பெரிசா எதையும் கொடுக்காம போறா
                            ( ஏனய்யா கடவுளே )
பொழப்பு சிரிக்குது
மூட்ட ரெண்டு தூக்குன
பத்து ரூபா ரெண்டு தர்றான்
அதுல
முட்ட ரெண்டு வாங்கிட்டு போனா
சண்டையும் தான் நடக்குது ..
முத்தம் கித்தம் கொடுக்க முடியல
மூதேவி மக
மூஞ்சிக்கு முன்னாடி அழுவுறா
                         ( ஏனய்யா கடவுளே )
பிரியாணி வாங்கிட்டு வந்துருக்கேன்
கூடவே
விசத்தையும் கலந்து வச்சுருக்கேன்
நினச்சா
கண்ணு கலுங்குதய்யா
வவுத்துல இருக்குற புள்ள
ஆணா பொண்ணானு தெரியலய்யா
முடிவு தான்  எடுத்திட்டேன்    
மூச்சு விட துணிஞ்சுட்டேன்...
நாங்க கண்ண மூட போறோம்
இப்பவாவது
கண் தொறந்து பாருமய்யா !!

ஏனய்யா கடவுளே
கல்லாயி தொலஞ்ச
கண் தொறந்து பாக்கமாட்டிய!!

Monday, March 29, 2010

சிகரெட்- சிரிக்கின்றான் !!!!




சிகரெட்- சிரிக்கின்றான் !!!!

நண்பா
என் ஆயுள் சாம்பலில்
உன் ஆயுளும்
கரைகிறது ..
" சிகரெட்"
--------------------------------------------------------------------------------
என்னை
புகைப்பதினால்
புற்றுநோய் இலவசம்
" சிகரெட்"
---------------------------------------------------------------------------
ஐந்து ரூபாயில்
ஆறடி குழி
" சிகரெட்"
--------------------------------------------------------------------
காலனின்
ஸ்பெஷல் வாகனம்
" சிகரெட்"
--------------------------------------------------------------------
நானும் புகைவண்டியே
பயணம் செய்யலாம்
பரலோகத்திற்கு ...
" சிகரெட்"
---------------------------------------------------------------
கழிவறையில்
என் பெயர்  ' இமினா'
" சிகரெட்"
--------------------------------------------------------------
காதலில்
தோற்றவனுக்கு
நான் உயிர் கெ [கொ]டுக்கும்  தோழன்
" சிகரெட்"
-------------------------------------------------------------------

Saturday, March 27, 2010

இது சொர்க்கத்திற்கு ......!!!








ஓலைகுடிசையினிலே
ஒற்றை நிலா  வெளிச்சதினிலே
மங்கை உனக்கு
மகனாக பிறந்தேனம்மா!!
நீ
மனம் மகிழும் நேரம்
உன்
மாங்கல்யம் பறிபோனதம்மா !!

மண்டியிட்டு அழுதாயம்மா
மனம் இறங்கவில்லை
இறைவனம்மா ..
மாராப்பு விலக்கி
மகன்-எனக்கு
பசி தீர்த்தயம்மா
பஞ்சனை இன்றி
பஞ்சமின்றி !!

கிழிந்தலை உடித்தினயம்மா
செல்ல கிளி எனக்கு
கீற்று தட்டில்  சோறு இட்டயம்மா
முள்ளுகாட்டினிலே
முழங்கால் சேலை உயர்த்தி
காலனி இல்லாமல்
கால் கடுக்க உழைத்தயம்மா!!

உடுத்த உடிப்பின்றி - நீ
இருக்க புள்ளை - எனக்கு
புத்தாடை கட்டி மகிழ்ந்தயம்மா !!

பால் பருவம் ஆகிவிட்டதம்மா
பள்ளி பருவம் வந்துவிட்டதம்மா
பணக்கார பள்ளியில்
சேர்க்க  பஞ்சாலைக்கு
பயணம் செய்தாயம்மா !!
நான் கற்க - கந்து வட்டிக்கு
சீமண்ணை வாங்கினயம்மா ..

கல்லூரியில் சேர வேண்டும்
என்றுதானே உரைத்தேனம்மா ..
உயிர் உருக்கும்
உலையில்  பணி சேர்ந்தயம்மா
கல்லூரி வாசலை மிதிக்க
கந்து வட்டிகாரனிடம்
ஏசு பெற்றயம்மா

கனவுகோலோடு படிக்கின்றேனம்மா
நீ  கொடுத்த முத்த பரிசினை
எண்ணிக்கொண்டு ...
கடிதம் போட்டேனம்மா
அதை
அடுத்தவர் படிக்க கேட்டு
மனம் மகிழ்ந்தயம்மா !!

தந்தி வந்ததம்மா
தாவி ஓடினேனம்மா
தயக்கமின்றி  நம்
தலைஎழுத்தை
மாற்ற போகும்  பணத்தை தேடி !!!

அம்மா
உன் முத்து மகன்
வந்திருக்கிறேன்
உன் செல்ல கிளி வந்திருக்கிறேன்
கலெக்டராக  வந்திருக்கிறேன்
கை நெறைய காசுடன் வந்திருக்கிறேன்
கண் திறந்து பாரம்மா
 அழுகின்றான்
அந்த உயிர் அற்ற உடல் மீது !!!!

Friday, March 19, 2010

முதிர் கன்னி





முதிர்  கன்னி ஒருத்தி
மோட்சம் பெற போவதை
குறிப்பு ஒன்றில் குறிக்கிறாள்
இவ்வாறு ....

என் பெயரோ
மங்களம்
மங்களகரமான பெயர்
எனக்கு வயது
இருபத்தி ஆறு

மங்களம்
பெயரளவில் மட்டும் தான் !
வாழ்வில் இல்லை ...
வீட்டிற்கு - ஒரு
பெண் நான்
சுகமாய்  அனுபவித்தேன்
வாழ்க்கையை .......

வாழைபழ தோல்
வழுக்கியும் விழாமல்
 இருப்பது  - போல
விழாமலும்
அழாமலும்
இருந்தேன்  !!!

வயது பதினாறில்
பெண்ணுக்குரிய 
கன்னித்தன்மை  அடைந்தேன் ...
மாதவிடாயும்
மாதா மாதம் - வந்து
சென்று கொண்டிருந்தது  ...

மகிழ்ச்சியும்
எனக்குள்  !!
சேயாக இருந்த  - நான்
தாயாகும் காலம்
கனிந்து விட்டது -என்று
எண்ணித்தான்
மகிழ்ச்சி....
மகிழ்ச்சி....


மரத்தின்
கிளை உதிர்ந்தாலும்
மரம் கண்டுகொள்வதில்லை ....
அதுபோல தான்  - நானும்
இளமை காலம்
முடியபோவதை  - எண்ணி
எரிச்சல் இல்லை !!

காலம்
கடந்து விட்டன ....

எனக்கு  வயதோ
முப்பது .....

விடிந்த சூரியனை
விழி கொண்டு - காண
மனமில்லை  !!
இருட்டை இறுக
கட்டிக்கொள்ள ஆசை  !

ஏளனம் பேசுபவர்
ஆயிரம் ...
என்னை பற்றி ..
என்
பெண்மை பற்றி ...

பூக்காரிகாளை
வெறுக்கிறேன் ....
புடவைக்காரிகாளை
புற முதுகிட்டு -ஓட
துடிக்கிறேன் ......

எனக்கு
வயதோ  முப்பது  !!


மாராப்பு
மறைத்து  இருந்தாலும்
மானம் போகவில்லையே !!
கொள்ளை அழகு
தேகம்
என் தேகம் ...
தேடி  - கொள்ளை  கொள்ள
கொள்ளைக்காரன் -ஒருவன்
இன்னும் வரவில்லையே  .....

எனக்கு வயதோ 
முப்பது



இரண்டோ  மூன்றோ
குழந்தைகளுக்கு  தாயாகி
தங்கமாக  வேண்டியவள்  !!
தகரமாக
வீசப்பட்டு விட்டேன் !! 


இறைவா ...
எனக்கு
என்ன குறை ?
என்
கண்ணிதன்மையில் - தான்
என்ன கறை?


எனக்கு வயதோ 
முப்பது

முக்கால் பெண் - நான்
கன்னி தன்மை
இழக்காத
முதிந்த  கன்னி  - நான் !

முகத்தில்  சுருக்கம்
மூப்பு அடைய போவதை
முன் கூட்டியே  சொல்கிறது - அது 
சலனங்கள் உண்டு
வழி தவற - மனமில்லை


எனக்கு வயதோ 
முப்பது

மானம்
மார்பளவிலும் கசியவில்லை  !!
மணவாளன்
இன்னும் வரவில்லை  ....

பாரமாக நிற்கின்றேன்
சுமையாக சுற்றுகின்றேன் ....
ஈன்றவனுக்கும்
என்  பெண்மைக்கும்  !!

இறைவா....  


உன் இலக்கணத்தில்
கன்னியாக
இறப்பவளுக்கு
நரகமா ?
சொர்க்கமா ?

பாரம் தாங்காமல்
குலையை  - அதன்
குலையை மண்ணோடு
பங்கிட்டு கொள்கிறது ....
முதிர்ந்த  வாழை...

நானும்
அவ்வாறே ....
பலம் இல்லை - என்னில்
பாரமாக இருக்க
விரும்பவில்லை  ...

பரமாத்மாவே
உன்னோடு 
பங்கிட்டு கொள்கிறேன் 
என் - மோட்சத்தை  !!

இடம் - ஒன்று  ஒதுக்கு
உன்
இலக்கணத்தில் ....

என் பக்கங்கள் !!!

                                          






ஆம்
நீ அழகான
ராட்சசி  தான் !!
என்
இதயத்தை துடிக்க
வைத்து -என்னை
கொள்ளும் - நீ
அழகான 
ராட்சசி  தான் !!

-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------

பார்
வானவில்லும்
வெட்கபடுகிறது !!
கொடியினில் -காயும்
உன் துப்பட்டாவின்
அழகை கண்டு !!!

-------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------

ஏனடி
நான் காண்பவைகளில்
காட்சி தருகிறாய்  !!
கடவுளா ?
காதலியா ?
நீ

-------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------

தென்றல்
வரும்போது  உரையடதே
வீசுகின்ற வார்த்தைகளை
களவாட காத்திருக்கின்றன
கள்வனாய் !!!

---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------

உன்
ஒரு தலை முடியின்
அழகினில்
ஒற்றை நொடியினில்
ஆகிவிட்டேன்
ஒரு தலை
காதலனாய் !!!

---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------

என்
வீட்டினில் மின்சாரம்
இல்லை ......
கொஞ்சம் - என்
வீடு வரை
வந்து போவாயா ?
நிலவு வந்தால்
வெளிச்சம் வந்து விடுமாமே !!!!

---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------

Thursday, March 18, 2010

என்னவளே ......!!!!


என்னவளே
இனிமேல் ஜன்னல் ஓர
இருக்கையில் உட்காராதே.....
அங்கே பார்
நீ
கடந்து போனதற்காக
மரங்கள் எல்லாம்
மாநாடு போடுவதை !!!!

*********************************************************************************
*********************************************************************************

என்னவளே
இனிமேல் மழையை
கடிந்து பேசாதே
பார்
எப்படி அழுகிறது !!!!

*******************************************************************************
*******************************************************************************

என்னவளே
இன்று - நீ
ஊரில் இல்லை என்பதை
உணர்ந்து கொண்டேன் ...
பார்
நிலவு  - முழு நிலவாக
ஆர்ப்பரிபதை
பெளணர்மி தினத்தில் !!!!!!

****************************************************************************
****************************************************************************

என்னவளே
மாலை நேரத்தில்
சோலைஓரத்தில்  நடந்து - செல்லாதே ...
பார்
மலர்கள் எல்லாம்
மண் நோக்குகின்றன
வெட்கப்பட்டு !!!!!!

**************************************************************************
**************************************************************************

என்னவளே
மாலையில் துயில்
கொள்வாய் போலும் ....
அதனால் தான்
ஆதவன் அந்தி சாய்கிறான்
உன்னை காணமல் .....
கோபத்தில் !!!!

*************************************************************************
*************************************************************************

என்னவளே
இனிமேல்
மொட்டை மாடிக்கு எல்லாம்
செல்லாதே ...
அங்கு பார்
நேற்று இரவு வந்த
நட்சத்திரங்கள்  மறைய
மறுக்கின்றன  !!!!!!

***********************************************************************
***********************************************************************

என்னவளே
ஏன்
எல்லா புத்தகத்தின்
முதல் பக்கத்திலும்
கவிதை எழுதுகிறாய் - என கேட்டேன்

நீயோ

ச்சீ போடா -என்று
சொல்லிவிட்டு
என் பெயரை தான்
எழுதிருக்கிறேன்  - என்றாய்
சின்ன சிணுங்கலோடு  !!!!!!!

**********************************************************************************
**********************************************************************************

என்னவளே
நம்  உரையாடலில்
சொன்னேன்
கவிதை போட்டி இருக்கிறது
நாளை என்று .....

உடனே கேட்டுவிட்டாய்
உனக்கு கவிதை எல்லாம் எழுத
தெரியுமா --என்று  !!

நானோ
உம்
உம் -என்று
தலை ஆட்டிகொண்டே
அடி போடி என் அழகியே
இவ்வளவு நேரமும்
ஒரு கவிதையோடு --தான்
உரையாடி கொண்டிருந்தேன்  என்றேன் ......

அதற்கோ ... நீ ....
" " ஐயோ ஒரு பித்தனை காதலித்து விட்டோமே -என்று
 என் நெஞ்சருகே தலை சாய்த்தாய்
  என்
 சட்டை பித்தானை கட்டி கொண்டு  ""
 

Wednesday, March 17, 2010

கார்கால கனவு ... ஒன்று !!!









அது
ஓர் கார்காலம் !!!
இடியின் இன்னிசையில்
மின்னலின் மிளிர்ப்பினில்
நடந்து கொண்டிருந்தேன் 
நடை பாதையில்
உன் நினைவுகளை ஏந்தி கொண்டு ....

அன்பே
அது
ஓர் கார்காலம் !!!
கொட்டும் மழையினில்
 கொண்டை சேவல்
நானென  சிறகடித்து
ஓடிகொண்டிருந்தேன் -உன்னை மட்டும்
நினைத்து கொண்டு ....

குளிரோ
என் தேகம் -சிலிர்க்க வைக்க  !!
வாகனமோ
வழிந்து கிடந்த நீரை- வாரி இறைக்க !!
கோபம் வந்தாலும்
அது
கொஞ்சல் தான்
அதுவும் கொஞ்ச நேரம் தான் 

வானவில்லை பார்த்து
வாயடைத்து நின்றேன் !!!
 மனதளவில்
ஒரு கண்ணதாசன் ஆகிவிட்டேன்
அந்த கணத்தினில் 

இதோ ....
இதோ ....
மனதின் கண்ணதாசன்
காவியம் படைக்க -தயாராகி விட்டான்
காவியத்தில்
ஒன்று -கவிதையாய்
கவிதையென
உன்னை நினைத்து ......


 நற்றினை
 நடை உனது
 நசுங்கி விட்டதடி 
மனம் எனது ...

குறுந்தொகை
குறுஞ்சிரிப்பு  உனது
குதித்து எழும்பிய
மனம் எனது ....

புறநானூறு
புன்னகை உனது
புதைந்து விட்ட
மனம் எனது ....

இன்னசை அளபெடை
இடை உனது - கணத்தில் 
இடிந்து விட்டதடி
மனம் எனது ....

கலிங்கத்துபரணி
கயல் உனது
அதில்
கவிழ்ந்த மனம் எனது .....


நாலடியார்
மனம் உனது
நாணம் கொண்டதடி
 மனம் எனது .....

பதிற்றுபத்து 
பாசம் உனது
பாசறை கண்டது
மனம் எனது

 திருவாசகம்
திருவாய் உனது
திக்கு தெரியாமல் போனதடி
 மனம் எனது..... 


பரிபாடல்
 பரிவு உனது
பணிந்து கொண்டதடி 
மனம் எனது ....

அகநானூறு
அழுகை உனது
அதிர்ந்து விட்டதடி
 மனம் எனது .....

செய்யுள்
 செவி உனது
அதன் பின் சென்று விட்டதடி
மனம் எனது .....

சீவகசிந்தாமணி
 சிகை உனது
அதில் சிக்கி கொண்டதடி
மனம் எனது .....

இரண்டடி திருக்குறள்
பேச்சு உனது
அதில் இயங்க மறுக்கிறது 
இதயம் எனது  .....


ஆஹா
இலக்கணமும்
இலக்கியமும்
இடைவிடாது -இதயத்தின்
குறுக்கேயும் நெடுக்குமாய்
நெடுநல்வாடை -என
நெகிழ்ந்து கொண்டிருக்கிறது 


சிலப்பதிகார
மணிமேகலை நீயடி
சிதைந்து விட்ட
கோவலன் நானடி  ....

மங்கை மாதவி -நீயென
 மாலை இடடி
மணவாளன் -நானென வருவேன்
 உன் பின்னாலடி ....

                 அப்போது நினைத்து கொண்டேன்
இதையெல்லாம் தேர்வில்
எழுதி இருந்தால்
செந்தாமரையென 
செங்கோல் உயர்த்தி
செந்தூரம் இட்டபடி
வென்று இருப்பேன்
தமிழில் முதல் மாணவன் -எனும் பட்டத்தை !!!

இப்போதும் மட்டும் -என்ன
தேர்வு தான் எழுதி இருக்கிறேன்
 என்ற தெரிநிலை எனக்குள்

 ஆம் அது காதல் தேர்வு !!


 மின்சார கம்பியினில்
அழகாய் வழிந்து ஓடிய 
மழை நீரின்   
மின்சார பூ  நீ தெரிந்ததினால்
 இத்தனை
இத்தனை
இலக்கணங்களும்....
 இலக்கியங்களும்  ....

ஆம்
அது ஓர் கார்காலம் !!

கவிதைகள் படைத்து கண்ணதாசன்
ஆகிவிட்டேன்  !!
சொல் -கண்ணே
உன் மனதினை வென்று
கண்மணி -உன் தாசன் 
ஆவது எப்போது ???


ஆம்
அது ஓர் கார்காலம்
ஒவ்வொரு துளியிலும் -உன் நினைவு
ஒவ்வொரு நினைவினிலும் -என் காதல் ......